Sunday 1 October 2023

முறிந்த ஏப்ரல்

 


இந்த நாவல் கானூன் என்று அழைக்கப்படும் பண்டைய அல்பேனிய சட்ட விதிகள் மற்றும் இரத்தப் பகையின் பாரம்பரியத்தைப் பற்றி பேசுகிறது. தனது சகோதரனின் மரணத்திற்கு பழிவாங்குவதற்காக கானூன் சட்டத்தின் கீழ் ஒரு கொலை செய்ய நிர்பந்திக்கப்படும் ஜார்க்கின் (முப்பது நாள்) வாழ்க்கையும்,  எழுத்தாளரும் இளம் கணவருமான பெஸ்ஸியன் வோர்பஸி தன்  மனைவி டையானாவோடு தேனிலவு பயணமாக இந்த உயரமான பீடபூமிக்கு வரும் போது கணவன் தன் மனைவிக்கு கானூன் சட்டத்திட்டங்கள், குனான் பற்றி அனைத்தையும் கூறுகிறான். 

அவர்களின் பயணத்தின் போது அவர்கள் ஜார்க்கை சந்திக்கிறார்கள். பேரழகியான டையானாவின் மீது ஜார்க்கின் ஈர்ப்பும் முப்பது நாட்களுக்குப் பின் கொல்லப்படவிருக்கும் ஜார்க்கின் மீதான டையானாவின்  பரிவும் மெல்லிய காதலாக உருமாறி, இருவரும் மறுசந்திப்பிற்கானத் தேடலில் இருக்கிறார்கள். இந்த தேடல் கானூம் சட்டத்திட்டங்களை மீற வைக்கிறது. அந்த மீறலின் விளைவு தான் நாவலின் முடிவு. 

இந்த நாவலின் கொடூரமான மற்றும் கவர்ச்சிகரமான பகுதி இரத்த பகையைச் சுற்றியுள்ள முழு பொருளாதாரம்.  இந்த கொலைகளைச் சுற்றி குறிப்பிட்ட விதிகள் மற்றும் செயல்முறைகள் உள்ளன. அவர்கள் பழிவாங்குவதற்காக இறந்தவர்களின் சட்டையை தங்கள் வீடுகளில் தொங்கவிடுகிறார்கள். மரணத்திற்குப் பதிலாக காயங்கள் ஏற்பட்டால், குறிப்பிட்ட இழப்பீடு வழங்கப்பட வேண்டும். இதற்கென  நடுவர், மருத்துவர் உள்ளடக்கிய குழு சேதம், இழப்பீட்டுத் தொகையை நிர்ணயம் செய்கிறார்கள். கொலைக்கு தனியே வரி செலுத்த வேண்டும், ஒரு குடும்பத்தில் நடந்த அனைத்து கொலைகள் மற்றும் பகையின் வரலாற்றை பதிவு செய்யும் புத்தகம் உள்ளது. இதை கண்காணிப்பவரும் , இரத்த வரி வசூலிப்பதற்குப் பொறுப்பாளராகவும் இருப்பவர் அரசனை அடுத்து அதிகாரம் மிக்கவர். . 

இரத்தப் பகையைத் தவிர, அன்றாட வாழ்க்கைக்கான பிற நடத்தை நெறிமுறைகள் உள்ளன. கானூன் கீழ் உள்ள ஒரு வீட்டில் தங்கும் விருந்தினர் பாதி கடவுளுக்கு நிகரானவர்.  இந்த மக்கள் விருந்தினருக்கு உணவு மற்றும் தங்குமிடம் வழங்குகிறார்கள், அவர்களுக்காக தியாகம் செய்ய தயாராக உள்ளனர். அவர்களின் மரணத்திற்கு பழிவாங்கவும் (விருந்தினர் அவர்களின் பாதுகாப்பில் இருக்கும்போது இறக்க நேரிட்டால்) தயாராக உள்ளனர். அப்படியான ஒரு பழி தான் ஜார்க்கின் குடும்பத்தை மூன்று தலைமுறையாகத் தொடர்கிறது. .  

நாவலில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றொரு வழக்கம் திருமணத் தோட்டா வழங்கும் நிகழ்வு.  மணமகளின் குடும்பம் திருமணத்தின் போது மணமகனுக்கு ஒரு திருமணத் தோட்டாவை வழங்குகிறது.  எக்காரணம் கொண்டும் கணவனை விட்டு விலக மனைவி முடிவெடுத்தால், கணவன் அந்த தோட்டாவால் அவளை சுடலாம், அவளுடைய மரணத்திற்கு எந்த பழிவாங்கலும் தேவையில்லை. பெண்களுக்கு இச்சமூகத்தில் எந்தக் கருத்தும், அந்தஸ்தும் கிடையாது..  

இந்த நாவலை வாசிக்கும்  போது, ​​கானூனின் இந்த முழுக் கருத்தும் கற்பனையாக இருக்குமா என  நினைத்தேன். ஆனால் வடக்கு அல்பேனியாவில் இன்றும் புழக்கத்தில் இருப்பதாகத்  தன் மொழிபெயர்ப்பு குறிப்பில் பா.வெங்கடேசன் அவர்கள் குறிப்பிடுகிறார். அவரின்  மொழிபெயர்ப்பு 
மிகச் சிறப்பாகவுள்ளது. நிறைய வரிகளையும் வார்த்தைகளையும் அடிக்கோடு இடும் படி கவிநயத்தோடு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 

இந்த நாவலாசிரியர் இஸ்மாயில் கதாரே அல்பேனியாவின் சிறந்த எழுத்தாளர், கவிஞர், கட்டுரையாளர், திரைக்கதையாசிரியர், நாடக ஆசிரியர். அல்பேனிய மக்களின் வரலாற்று அனுபவங்கள், நவீன சூழல்களில் தொன்மங்களின் பிரதிநிதித்துவம் மற்றும் அல்பேனியாவின் சர்வாதிகார ஆட்சி ஆகியவற்றைப் பற்றி தன் புனைவுகளில் எழுதியவர்.

மேன் புக்கர் சர்வதேச விருது உள்ளிட்ட பல விருதுகளை தன் ஆக்கங்களுக்கு பெற்றிருப்பவர். 15 ஆண்டுகளாக நோபல் பரிசுக்கான பரிந்துரை பட்டியலில் இருப்பவர். அல்பேனியாவில் இவரின் ஒரு நூலாவது இல்லாத வீட்டை பார்ப்பது அரிது என்கிறது நியூயார்க் டைம்ஸ்". 

அவசியம் வாசிக்கப்பட வேண்டிய நாவல். நண்பர்களுக்கு இந்த நாவலைப் பரிந்துரைக்கிறேன். 

Monday 26 November 2018

கேசம் –நரன்


நவீன தமிழிலக்கியச் சூழலில் ஒரு கவிஞனாக தன்னுடைய இருப்பை உறுதி செய்த நரனின் அடுத்த நகர்வு சிறுகதைகள். “கேசம்என்ற அவரின் தொகுப்பில் மொத்தம் பதினோரு கதைகள் உள்ளன. ஒரு கதைசொல்லியாக தன் ஒவ்வொரு கதையின் களத்தையும் வித்தியாசப்படுத்த முயன்றிருக்கிறார். அவரின் அற்பணிப்பை ஒரு வாசகனாய் உணரும் தருணத்தில் இந்த பிரதியின் மீதான மதிப்பு கூடவே செய்கிறது.

இந்த தொகுப்பிலுள்ள மொத்தக் கதைகளையும் வாசித்தப் பின் மனம் ஒருவிதமான இருண்மை கொள்கிறது. துயரத்தை எழுதுவதில் தான் நரனுக்கு பெரும் விருப்பம் போலும். விருப்பமானவர்களின் துர்மரணமும் அந்த மரணத்தின் துயரை தாங்கிக் கொள்ள முடியாதவர்களின் மன பிரழ்வு நிலையும், அப்போது அவர்கள் வெளிப்படும் புதிரான நடவடிக்கைகளுமே இக்கதைத் தொகுப்பின் மையம் எனலாம்.

இத்தொகுப்பின் தலைப்பு கதையான கேசத்தில் வரும் வேலைக்காரி ஆவுடைத்தங்கம், ரோமம் கதையின் நாயகன் கணேஷ், மூன்று சீலைகள் கதையின் காசி, செவ்வக வடிவ பெண்களில் வரும் லீலா தாமஸ், பரிராஜா கதையில் பேராசிரியர் நிக்கோலஸ், பெண் காது கதையின் அடைக்கலராஜ் என ஏதோ ஒரு வகையில் மன பிரழ்வு கொண்டவர்களின் நிலையை நரன் எவ்வித பாசாங்குகளும் அற்று, தனக்கு வசப்பட்ட தேர்ந்த மொழியில் பேச விழைந்திருகிறார். அவை அதிர்ச்சியையும், பரிதாபத்தையும், கழிவிறக்கத்தையும் ஏன் சிரிப்பையும் கூட உண்டாக்குகின்றன.

குறிப்பாக ரோமம் என்ற கதையில் வரும் கணேஷ் பித்து நிலையில் நடந்து கொள்ளும் விதம் வாசிக்கும் நம்மையும் பதட்டமடையவே செய்கிறது. இந்த கதை எனக்கு “Perfume: thestory of a murderer” என்ற ஆங்கிலப் படத்தின் மையக் கதையை நினைவுபடுத்துகிறது என்ற போதும் நரன் இந்த கதையில் பித்து நிலையின் உச்சத்தை தன் எழுத்தில் தொட்டு விட்டதாக உணர்கிறேன்.  

நரனின் கதை மாந்தர்கள் அன்புக்காக ஏங்குபவர்களாகவும், பிரிவையும் அவமானத்தையும் மறக்க முடியாதவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்களின் மனப் பிரழ்வு நிலை அடுத்தவர்களைப் பாதிக்காமல்  ( கணவனால் தனக்கு நேர்ந்த துன்பத்தையும் அவமானத்தையும் மறக்க முடியாத லீலா தாமஸ் தன் துணிக்கடையில் வைக்கப்பட்டிருக்கும் ஆண் பொம்மையை கோவத்தோடு அடித்து உடைப்பது தான் அவர்கள் செய்யும் அதிக பட்ச வன்முறை எனலாம்.) தன்னை சிதைத்துக் கொள்வதிலும், உச்சபட்சமாக தற்கொலை செய்து கொள்வதிலுமே முடிந்து விடுவது பெரும் துக்கமே என்றாலும் ஒரு வகையில் ஆறுதலே.

காரணம் வாழ்வின் மைய நீரோட்டத்திலிருந்து கொஞ்சம் பிசகி தங்களைத் துண்டித்துக் கொள்ளும் இவர்கள் மீட்க முடியாத நிலையில் தங்களைத் தாங்களே வருத்திக் கொள்வதால் அவ்வாறு எண்ண வைக்கிறது.

இக்கதைகளின் களம், கதை மாந்தர்கள் எல்லாம் சமகாலத்தில் வாழ்பவர்களாக இல்லாமல் எண்பதுகளிலும் தொன்னூறுகளிலும் வாழ்ந்தவர்கள் போல் தோன்றுவது இத்தொகுப்புக்கு பழைமையான நெடியைக் கொடுக்கிறது. அதனால் இக்கதைகளை வாசித்து முடித்ததும் புதிகாக ஒன்றை வாசித்த திருப்தி தராமல் எப்போதோ வாசித்த பழைய கதையை மீள் வாசிப்பு செய்ததான உணர்வைக் கொடுப்பது மட்டுமே இத்தொகுப்பின் பலவீனம் என நினைக்கிறேன். ஆனாலும் நரனின்  வசீகரமான மொழியும், திறன்பட கதையை நகர்த்தி செல்லும் போக்கும் இந்த பலவீனத்தை ஒன்றுமில்லாதாக மாற்றி விடுகிறது.

கேசம்இந்த வருடத்தில் வெளி வந்துள்ள சிறுகதைத் தொகுப்புகளில் முக்கியமான தொகுப்பு. நண்பர்களுக்கு இதை மிகுந்த மகிழ்வோடு பரிந்துரைக்கிறேன்.

Tuesday 1 May 2018

அசோகமித்திரனின் இந்தியா 1944 - 48


இந்த வருட கோடை விடுமுறையின் துவக்கத்தில் நான் வாசித்த முதல் புத்தகம் அசோகமித்திரனின் "இந்தியா 1944 - 48". அவர் எழுதிய இரண்டு குறுநாவல்களை இணைத்து ஒரே புத்தகமாக  (அவரின் விருப்பத்தின் பேரில்) காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த இரண்டு குறுநாவல்களின் கதை களமும் ஒன்றே என்றாலும் கதைச்சொல்லிகள் வேவ்வேறானவர்கள். முதல் குறுநாவலான "பம்பாய் 1944" மணி என்ற இளைஞனின் பார்வையில் சொல்லப்படுகிறது. அடுத்த குறுநாவல் " இந்தியா 1948" மணியின் மூத்த சகோதரன் சுந்தரத்தின் பார்வையில் சொல்லப்படுகிறது. இது வழக்கமான குடும்பக் கதை தான் என்றாலும் அசோகமித்திரன் கதை நிகழும் காலம், கதைக் களம் மூலமாக வித்தியாசப்படுத்தியிருக்கிறார்.  பொதுவாக அசோகமித்திரன் தன் அனுபவப் பரப்பைத் தாண்டி முழுவதும் கற்பனையான படைப்பை எழுதியதில்லை என்பது என் வாசிப்பு அனுபவத்தின் புரிதல். விதி விலக்காக "பிரயாணம்" என்ற சிறுகதைச் சொல்லலாம். ஆனால் இந்த நாவல் பாலக்காட்டியில் ஆரமித்து பூனே, பம்பாய், அமெரிக்கா, ரிஷிகேஷ் என பயணிப்பது அசோகமித்திரனின் வாசகனாய் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுக்கிறது.

                                                           

முதல் குறுநாவல் ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் பம்பாயில் வசிக்கும் பிராமண இளைஞன் மணி எதிர்கொள்கின்ற பிரச்சினைகளைப் பேசுகிறது. அண்ணனின் சம்பாத்தியத்தில் வாழ நேரும் அவனுக்கு முதலில் வேலை இல்லாததும் பின் சோப்பு தயாரிக்கும் கம்பெனியில் வேலை கிடைப்பதும் அதனால் காசநோய் வருவதும், அதற்கான சிகிச்சையோடே அண்ணன் வேலை பார்க்கும் கார் கம்பெனியில் இவனும் வேலைக்கு முயற்சி செய்வதும் என கதை நகர்கிறது. 

அப்போது இரண்டாம் உலகப்போர் நடைபெறும் சூழல் என்பதால் உணவு பொருட்கள் தட்டுப்பாடு, கள்ள மார்கெட் விற்பனை, துறைமுகத்தில் எதிர்பாராமல் நிகழ்ந்த குண்டு வெடிப்பு, ராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிற அதிகப்படியான சலுகைகள் என்று அன்றைய பம்பாயின் சூழல் மணியின் அன்றாட வாழ்க்கையோடு சொல்லப்படுகிறது. நோய் வந்த சமயத்தில் ஆஞ்சநேயர் கோவிலில் சந்திக்கும் மராட்டிய குஸ்திவீரன் விநாயக் குடும்ப நண்பன் ஆவது. அவனுக்கு மணி வேலை வாங்கி தருவது. விநாயக்கின் தங்கை நிர்மலாவின் நற்குணங்கள் பார்த்து மணிக்கு திருமணம் செய்ய அவனின் அம்மா, அண்ணி ஆசைப்படுவது என நாவல் விரிகிறது. 

எண்பது பக்கங்களுக்கு மிகாத இந்த குறுநாவலில் என்னை கவர்ந்த விஷயம் மணியின் குடும்பம் மராட்டிய குஸ்திவீரன் விநாயக்கின் குடும்பத்துடன் நெருங்கிய உறவு போல பழகுவது. பாலக்காடு பிராமண ஆச்சாரமெல்லாம் பம்பாய் போன்ற பெருநகரங்களில் செல்லுபடியாகாத விஷயங்கள் என்ற புரிதல் தான் நிர்மலாவை மணிக்கு மணமுடிக்கலாம் என்று யோசிக்க வைக்கிறது. ஒருவேளை நாம் வாழும் சமூகம் தான் சாதி அடையாளங்களைத் தூக்கி பிடித்த படி இருக்கிறதோ. அந்த சமூகத்திலிருந்து விலகி பெருநகரங்களில் அடையாளமற்று இருக்கும் போது சாதி பெரிய தடையாக இருப்பதில்லையோ அல்லது தன்னுடைய சர்வேவலுக்காக இவ்வாறு வளைந்து கொடுத்து போகிறதோ என தெரியவில்லை. சாதியின் பேரால் இன்று கூட கெளரவ கொலைகள் நடப்பதைப் பார்க்கும் போது இதையெல்லாம் யோசிக்கத் தோன்றுகிறது.

இரண்டாவது குறுநாவல் " இந்தியா 1948" மணியின் மூத்த சகோதரன் சுந்தரத்தின் பார்வையில் சொல்லப்படுகிறது. ஆங்கிலம் தெரிந்தவன் என்ற காரணத்தால் அமெரிக்காவிற்கு சென்று கார் தொழில் நுட்பத்தை ஓர் ஆண்டு கற்று வர கம்பெனியால் அனுப்பி வைக்கப்படுகிறான். அங்கு மேலும் ஓர் ஆண்டு தங்கி மோட்டார் எஞ்சினீரிங் படித்து முடிக்கிறான். இரண்டாண்டுகள் கழித்து நாடு திரும்பும் அவனுக்கு சுந்திர இந்தியாவின் மாற்றங்கள் தொழில் ரீதியாக சிக்கலை உருவாக்குகிறது. அவன் பணி செய்யும் கார் கம்பெனியின் முதலாளி அமெரிக்கன் என்பதால் வாகனங்களின் உதிரி பாகங்களை இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. அமெரிக்காவில் இருந்த போது உயர்கல்வி படிக்க வந்திருக்கும் லட்சுமி என்னும் பார்சி இன பணக்காரப் பெண்ணோடு சுந்தரத்திற்கு திருமணம் நடந்து விடுகிறது. ஐந்து வயதிலேயே இளம்விதவையாகி விடும் லட்சுமி. தன் கல்வியின் மூலம் தனக்கான விடுதலையைப் பெற முயல்கிறாள். லட்சுமியுடனான திருமணத்தை குடும்பத்திடம் எப்படி பகிர்ந்து கொள்வது என்று குழப்பத்தில் தவிக்கிறான். இத்தோடு பார்வதி இரண்டாவது முறையாக கர்பமாவதும், குழந்தையின் தலை திரும்பி இருப்பதால் பிரசவம் பெரும் சிக்கலாக இருக்கும் என மருத்துவர் சொன்னதால் ஏற்பட்ட பயம் என இக்குறுநாவல் வளர்கிறது. இந்த பிரச்சினைகளை எல்லாம் சுந்தரம் எவ்வாறு எதிர்கொண்டான் என்பதை எவ்வித மிகையும் இன்றி அன்றைய காலகட்டத்தின் தர்ம ஞாயங்களோடு அசோகமித்திரன் நாவலை முடித்திருக்கிறார்.

இந்த நாவலில் என்னை ஈர்த்த விஷயம் 1948- லேயே லட்சுமி அமெரிக்க சென்று படிப்பதும், மணியின் மனைவி பம்பாய் நகரத்தில் காரோட்டுவதும். ஒருவேளை பணக்கார பார்சி மற்றும் பிராமண குடும்பத்து பெண்கள் என்பதால் இந்த சுதந்திரம் இருந்ததோ என்னவோ தெரியவில்லை. ஆனால் மராட்டிய ஏழை பெண் நிர்மலா கூட தனக்கு திருமணம் இப்போது வேண்டாம். நான் படிக்க வேண்டும் என சொல்ல முடிகிறது. இந்த பெண்களோடு ஒப்பிடும் போது சுந்தரத்தின் மனைவி பார்வதி தான் பரிதாபத்திற்கு உரியவள். அவள் விருப்பம் கேற்கப்படாமலேயே தந்தையால் நடத்தி வைக்கப்படும் திருமணம். வேலையின் மித்தம் அமெரிக்கா சென்ற கணவனை இரண்டு ஆண்டுகள் பிரித்திருப்பது. தனக்கு தெரியாமல் கணவன் இன்னொரு திருமணம் செய்து கொள்வது என பலவிதங்களில் துன்பப்படுகிறாள். ஆனாலும் எந்த இடத்திலும் அவளால் எதிர்த்து பேச முடிவதில்லை. சுந்தரத்தின் அம்மா கூட ஆளுமை மிக்கவளாக இருக்கிறாள். ஆரம்பத்தில் அண்ணன் வீட்டில் விதவையாக அடங்கி இருந்தவள். தன் மகன்கள், மருமகளோடு பம்பாய் வந்ததும் தனக்கான அதிகாரத்தை எடுத்துக் கொள்கிறாள். எல்லா விஷயங்களையும் தீர்மானிக்கிற உரிமை அவளிடமே இருக்கிறது. மேலும் லட்சுமி மற்றும் அவளின் அம்மா என்று நாவலில் வரும் பெண் பாத்திரங்கள் அனைத்துமே மிகுந்த சுதந்திரத்தோடு இருப்பதைப் பார்க்க முடிகிறது.

இதற்கு எதிர்மாறாக நாவலில் வரும்  ஆண்கள் பயம் மிக்கவர்களாக, குழப்பவாதிகளாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. சுந்தரத்திற்கோ இரண்டாம் திருமணத்தை குடும்பத்தினரிடம் சொல்ல பயம், அதை அவர்கள் எவ்வாறு எதிர்கொள்வார்கள், சமூக என்ன நினைக்கும் என குழம்பி தவிக்கிறான். அவன் தம்பி மணியோ காசநோய் காரணமாக உயிர் பயத்தில் தவிக்கிறான். மராட்டிய பயில்வான் விநாயக் தனக்கு ஏதாவது வேலை கிடைக்குமா இல்லை வறுமையிலேயே கிடக்க வேண்டுமா என பயமும் குழப்பமுமாக இருக்கிறான். இவர்கள் எல்லோரையும் மிஞ்சும் விதமாக சுந்தரத்தின் மாமா ( பார்வதியின் தந்தை) ஐந்து பெண்களில் மூத்தவளுக்கு மணம் முடித்த கையோடு சாமியாராகப் போகிவிடுகிறார். இப்படி ஆண்கள் பலவீனர்களாகவும் பெண்கள் தைரியம் மிக்கவர்களாகவும் இருப்பது இந்த நாவலின் பலம் என நினைக்கிறேன்.

இந்திய சுதந்திரம் பற்றி, விடுதலைப் போராட்டம் குறித்து இந்த நாவலில் அதிகம் பேசப்படுவதில்லை. புதுமைப்பித்தன், கு.ப.ரா, ந.பிச்ச மூர்த்தி, மெளனி என மணிக்கொடி எழுத்தாளர்கள் கூட தங்கள் படைப்பில் சுதந்திரப் போராட்டம் பற்றி எழுதவில்லை தான். அப்படி எழுதியே ஆக வேண்டும் என்ற எவ்வித கட்டாயமும் இல்லை தான் என்றாலும் இந்த நாவலில் அதற்கான சாத்தியங்கள் இருந்த போதும் சொல்லப்படுவில்லை. அசோகமித்திரனுக்கு எழுத கூடாது என்ற மனதடைகள் இருக்கும் என நினைக்கவில்லை. அவரின் " பதினெட்டாவது அட்சக்கோடு" நாவலில் சுதந்திர இந்தியாவுடன் இணையும் போது ஐதராபாத் நிஜாம் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் நிகழ்ந்த பதட்டமான சூழல்கள் குறித்தே எழுதியிருக்கிறார். ஒருவேளை நடுத்தர பிராமண குடும்பங்களுக்கு சுதந்திர போராட்டம் பற்றியெல்லாம் பேச தேவை எழவில்லையோ என தோன்றுகிறது. இந்த நாவலின் மையபாத்திரமான சுந்திரம் உண்மையில் இந்தியா சுதந்திரம் அடைந்ததை விரும்பவில்லை. காரணம் அவன் அமெரிக்கா சென்று இரண்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு படித்த எதுவும் பயன்படாமல் போகிறது. சுதந்திர இந்தியாவில் அன்னிய நாட்டு கம்பெனிகளின் தயாரிப்புகளுக்கு அரசு தடைவிதிக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சியில் கார் தயாரிப்பில் கொடிகட்டி பரந்த நிறுவனம் இன்று தான் விற்பனை செய்த கார்களை பழுது பார்க்கும் ஒர்க்‌ஷாப் மாதிரி ஆகிவிடுகிறது. வாகனங்களின் உதிரிபாகங்களை இறக்குமதி செய்வதிலும் அரசு நெருக்கடி கொடுப்பதால் அமெரிக்க முதலாளி, தன் கம்பெனியை இந்தியர்களுக்கு விற்பனை செய்யும் நிலை உருவாகிறது. 

இந்த நாவலில் இன்னொரு முக்கியமான விஷயம். சுதந்திர இந்தியாவை ஆட்சி செய்த பல மந்திரிகளுக்கு அரசு இயந்திரத்தின் இயக்கம் பற்றி ஒன்றுமே தெரிவதில்லை. ( பின்னால் அனுபவம் மூலம் கற்றுக் கொண்டார்கள் என்பது வேறு)  பல ஆண்டுகள் ஆங்கிலேயர் ஆட்சியில் பணி செய்த உயர் அதிகாரி ஒருவர் இதை குத்தி காட்டி தொடர்ந்து திட்டிய படியே இருக்கிறார். அவர் நேர்மையான அதிகாரியாக இருந்தும் கூட சின்ன பிரச்சினைக்காக பணிநீக்கம் செய்யப்படுகிறார் என கதையின் போக்கில் சொல்லப்படுகிறது. ஆக அரசியல் பழிவங்கல் அப்போதே தொடங்கி விட்டதை அறிய முடிகிறது.   

                                                                   

இந்த நாவலில் முக்கியமான ஆளுமையாக சுந்தரத்தின் மாமாவை சொல்லத் தோன்றுகிறது. பேராசிரியராக வெளிமாநிலங்களில் பணி செய்து தன் குடும்பம் மற்றும் சகோதரியின் இரண்டு குழ்ந்தைகளையும் வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார். எல்லோரிடமும் சிரித்த முகத்தோடு பழகும் அவர் சுந்தரத்திற்கு வேலை கிடைத்த பின்னரே சாமியாராகப் போகிறார். மணி படிப்பில் கவனமில்லாமல் இருக்கும் போது தன்னோடு தங்க வைத்து சொல்லிக் கொடுத்து படிப்பில் வெற்றி பெற செய்ததும், சுந்தரத்தின் இரண்டாம் திருமண நிர்பந்தத்தை புரிந்து கொண்டு அவன் சார்பாக தன் மகள், தங்கையிடம் பக்குவமாக பேசுவதும், இந்த நாவலில் அவருக்கான முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

பொதுவாக அசோகமித்திரனின் படைப்புகள் ஏழை எளிய சாமானியர்களின் வாழ்வில் நிகழும் பிரச்சனைகளும், அதை எதிர்கொள்வதில் அவர்களுக்கு இருக்கும் தடுமாற்றம், வலி, வேதனைகளையும் எவ்வித கழிவிறக்கமும் கொள்ளாமல் நேர்மையோடு பதிவு செய்பவை. அவரை போலவே அவரின் கதாபாத்திரங்களுக்கும் வாழ்க்கை குறித்து எவ்வித புகாரும் இருப்பதில்லை. தோல்விகளையும், துரோகங்களையும் கடந்து அவர்களால் நம்பிக்கையோடு வாழ்க்கையை வாழ முடிகிறது. இந்த நாவலும் அப்படிபட்ட  மனிதர்களின் கதையையே வரலாற்று பின்புலத்தோடு சொல்கிறது என்றால் அதுமிகையில்லை.     




Tuesday 27 March 2018

ஜஹனாரா பேகம் : ராம்ராஜியத்தின் பெருவலி




 என்னுடைய பள்ளி நாட்களில்  தமிழுக்கு அடுத்து நான் விரும்பி வாசித்தது வரலாற்று பாடம். குறிப்பாக முகலாய சாம்ராஜ்யத்தைப் பற்றிய பாடப்பகுதிகள். வெற்று தகவல்களை வறட்டு மொழியில் சொல்லும் பாடநூலை மதிப்பெண்ணைத் தாண்டி புதிய உலகத்தை தெரிந்து கொள்ளும் உத்வேகத்தோடு வாசித்த அந்த நாட்கள் மறக்க முடியாதவை. கல்லூரி காலத்தில் மதனின் "வந்தார்கள் வென்றார்கள்" வாசித்த போதும் அதே குதுகலம்

முகலாயர்கள் வரலாற்றில் அப்படி என்ன இருக்கிறது. எது வசீகரிக்கிறது என்று யோசித்துப் பார்த்தால் பாபரில் தொடங்கி அவுரங்கசீப் வரையான மாபெரும் சாம்ராஜ்ஜியத்தின் தொடர்ச்சி, அதிகாரத்தை கைப்பற்ற நடத்திய பெரும் யுத்தங்கள், தலைமுறை தோறும் வரும் பேரழகிகள், தங்கள் புகழை நிலைபெற வைக்க ஸ்தாபித்த நகரங்கள், அரண்மனைகள், மசூதிகள், கல்லரைகள் என்று  பிரமாண்டங்களின் கவர்ச்சியும், அரியணை ஆசையில் நிகழ்ந்த போட்டிகளும், சூழ்ச்சிகளும், சகோதர யுத்தங்களும் புனைக்கதைகளுக்கு நிகரான சுவாரசியம் மிக்கவை. அந்த வகையில் " பெருவலி" முகலாயர்கள் பற்றிய புனைவு என்பதால் வாசிக்கத் துவங்கினேன்.

கவிஞர் சுகுமாரனின் முன்னுரைகளுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். தன் அனுபவப் பரப்பிலிருந்து மெல்ல துவங்கி தான் எழுத எடுத்துக் கொண்ட படைப்பின் மையத்தை மின்னல் வெட்டில் வெளிச்சம் பாயிச்சுவார். அது அந்த படைப்பை வாசிக்க பெரும்திறப்பாக இருக்கும். இப்படி சுகுமாரனின் முன்னுரையால் உந்தப்பட்டு நிறைய கிளாசிக் நாவல்களைப் படித்திருக்கிறேன். இன்று அவரே கிளாசிக் தன்மையுள்ள கதையை எடுத்துக் கொண்டு நாவல் படைத்துள்ளார்.

இந்த நாவல் இரண்டு பகுதியாக எழுதப்பட்டுள்ளது. முதல் பகுதி முகலாய பேரரசின் அக்பர் காலம் முதல் பேரரசர் ஷாஜகான் காலம் வரை மூன்று தலைமுறை மன்னர்களிடம் பணி செய்த பானிபட் என்ற வயது முதிர்ந்த ஆணின் ( நபும்சகம்) பார்வையில் சொல்லப்பட்டுள்ளது. இந்த பானிபட் இளவரசி ஜஹனாராவின் நம்பிக்கைக்கு உரியவனாகவும், அரசியல் சதுரங்கத்தில் காய்கள் எவ்வாறு நகர்த்தப்படும் என்பதை தன் அனுபவங்களால் யூகிக்க தெரிந்தவனாகவும் இருக்கிறான். இவன் கற்பனை பாத்திரம் என்றாலும் எனக்கு ராமாயணத்தில் வரும் கூனியை ஏதோ ஒருவிதத்தில்  ஞாபகப்படுத்துகிறான்இவன் பார்வையில் தான் நாவல் துவங்குகிறது

பேரரசர் ஜஹாங்கீர் பெயரில் நூர் மஹல் ஆட்சி செய்து கொண்டிருக்கிறாள். அதிகாரம் தன் கைகளுக்குள்ளேயே இருக்க சூழ்ச்சி செய்து தக்காணத்தில் ஷாஜகானையும் அவன் குடும்பத்தையும் சிறை பிடிக்கிறாள். அந்த சூழ்ச்சியை தகர்த்து வெற்றி வீரனாய் ஷாஜகான் ஆட்சியில் அமர்வதில் ஆரமித்து, அவரின் அன்பு நாயகி மும்தாஜ் பேகம் பதினான்காவது பிரசவத்தின் போது அதிக ரத்த போக்கால் இறந்தது வரையான கதையைச் சொல்கிறான்

“அதிகாரத்துக்காக மனிதர்கள் என்னவெல்லாம் செய்யக் கூடுமென்பதை மூன்று தலைமுறைகளாகப் பார்த்திருக்கிறேனே! பணிவு காட்டுவார்கள். நயந்து பேசுவார்கள், பாசம் பொழிவார்கள், சதி செய்வார்கள், உறவு பாராட்டுவார்கள். உறவு பாராட்டியவர்களுக்கே பகையாவார்கள். பகைவனுக்கு நட்பாவர்கள். வாளால் வெட்டிக் கொல்வார்கள். வெற்றி ஈட்டுவார்கள். வெற்றி பெற்றதும் எல்லாம் மறப்பார்கள். எல்லாரையும் அடக்கி ஆள்வார்கள். தனது ஆட்சி முடியாதது என்று கனவு காண்பார்கள். அந்த கனவிலேயே புதையுண்டு கிடப்பார்கள்”.

“துணிச்சல் தனியானதல்ல. ஒரு பகுதி நுண்ணறிவு, ஒரு பகுதி அடங்காமை, ஒரு பகுதி பயம் எல்லாம் சேர்ந்தது தான் துணிச்சல்”  என பானிபட் என்ற அடிமையின் மன ஓட்டமாக செல்லப்படும் விஷயங்கள் அனைத்திலும் சுகுமாரன் என்ற ஆளுமையின் நுண்ணுணர்வு மற்றும் கவிதுவ தெறிப்புகளையும் உணர முடிகிறது. அது நாவலை இன்னும் மனதிற்கு நெருக்கமான பிரதியாக மாற்றுகிறது

இரண்டாம் பகுதி ஜஹனாராவின் பார்வையில் சொல்லப்படுகிறது. பதினான்கு வயதில் அரசியல் விவகாரங்களில் அலோசனை சொல்லும் நுண்ணறிவு. தர்பாரில் தனி ஆசனம். மூன்றுக்கும் மேற்பட்ட மொழிகள் தெரிந்திருந்தன. கவிதையும் காவியமும் வேதங்களும் புராணங்களும்  அறிந்திருந்தாள். மதநூல்களைப் பயின்றிருந்தாள். பாடவும் ஆடவும் கற்றிருந்தாள். கட்டடக் கலையில் தேர்ச்சி பெற்றிருந்தாள். கப்பல்களும் தனி மாளிகையும் ததும்பி வழியும் கஜானாவும் பணிவிடை செய்ய அடிமைகளையும் பெற்றிருந்தாள். அரச குடும்பத்துப் பெண்களில் யாரையும் விட செல்வமும் செல்வாக்கும் அவளுக்கு இருந்தன. எல்லாம் இருந்தன. ஆனால் எது இருந்தால் இவையெல்லாம் மேலானவையாகுமோ அந்த ஒன்று அவளுக்குக் கிடைக்கவில்லை. காரணம் அவள் பெண்ணாக இருந்தாள். துன்புறுத்தும் இந்த உண்மை போதாதா ஜஹனாராவை மையமாக்கி எழுத? என தன் பின்னுரையில் சுகுமாரன் குறிப்பிடுகிறார்

அக்பர் காலத்தில் அரச குடும்பத்து பெண்கள் திருமணம் செய்ய தடை விதித்திருந்தார். காரணம் தன் வாரிசுகளோடு, மருமகன்களும் அரியணை போட்டியில் ஈடுபடக் கூடும் என்பதால் இந்த தடை நீடித்தது. எனவே அரண்மனை பெண்கள் தன் தந்தை, சகோதரன் என அதிகார மையங்களோடு அன்பு, விசுவாசம், தியாகம் ஆகியவைகள் மூலமே தனக்கான முக்கியதூவத்தையும், அதிகாரத்தையும் பெற முடிந்தது. ஜஹனாரா தன் தந்தையையும் சகோதரன் தாராவையும்  தன் சுயநலம் கடந்து நேசித்தாள்.

திருமணம் செய்யும் உரிமை மறக்கப்பட்டாலும் எதிர்பாலினத்தின் மேல் ஏற்படும் இச்சைகள் இல்லாமலாப் போய்விடும். ஜஹனாராவின் காதல் பற்றி வரலாற்றில் பல்வேறான யூகங்கள் நிழவுகிறது. இந்த யூகங்களிலிருந்து தனக்கு சரி எனத் தோன்றியதைத் தேர்வு செய்தது குறித்த சுகுமாரனின் பார்வை இவை.

 “ஜாஷஹானுக்கு அணுக்கமான தளபதி நவ்ஜத்கானை காதலனாகச் சித்தரிக்கிறார் இந்து சுந்தரேசன். ஆனால் ஜஹனாரா நவ்ஜத் கானை “காற்று வீசும் திசையில் சாயும் சிக்கமோர் மரம்” என்று துச்சமாகவே மதிப்பிடுகிறாள். தன் முப்பதாவது பிறந்த நாளில் தீ விபத்துக்கு உள்ளாகிறாள். அவளுக்கு மருத்துவம் பார்த்த காப்ரியேல் பெளட்டன் என்ற ஆங்கிலேயர் மீது காதல் கொண்டாள் என ருச்சிர் குப்தா சொல்கிறார். ஆனால் அவர் பதில் உதவியாக வங்காளத்தில் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு நிலம் பெற்றுக் கொள்கிறார். ஷாஜஹானுக்கும் ஜஹனாராவுக்கும் இடையில் பிறழ் உறவு இருந்தது என்று எழுதுகிறார் இத்தாலி பயணியான நிக்கோலோ மனூச்சி. அதே காலக் கட்டத்தில் வந்த ஃபிரான்சைச் சேர்ந்த ஃப்ரான்ஸீவா பெர்னியர் மனூச்சியின் கருத்தை மறுக்கிறார்” என பல்வேறு கோணங்களை உள்வாங்கி, துலேர் என்ற சிற்றரசன் மேல் ஜஹனாராவிற்கு காதல் இருந்ததாக எழுதுகிறார். இருவரும் பேசிக் கொள்ளும் தருணங்கள் மிக குறைவாக இருந்த போதிலும் அவனை நினைத்து ஜஹனாரா ஏங்கும்  காதல் தருணங்களை சுகுமாரன் கவிதை மொழியில் எழுதிச் செல்கிறார்

சகோதரர்கள் தாரா, அவுரங்கசீப் இடையேயான அதிகார யுத்தமும், வெற்றி பெற்ற அவுரங்கசீப் தன் தந்தையை ஆக்ரா கோட்டையில் சிறை வைப்பது, தன் பிரியத்துக்குறிய தந்தையுடன் ஜஹனாரா தங்குவது என நாவல் விரிந்து பேரரசர் ஷாஜகானின் மரணத்தில் முடிகிறது.

யுத்த களத்தில் வகுக்கப்படும் வியூகம் தான் வெற்றியைத் தீர்மானிக்கிறது என்பதை இளவரசன் தாரா உணரவேல்லை. தன்னை முன்னிலைப்படுத்தி போர் செய் அப்போது தான் சக்ரவர்த்தி ஷாஜஹான் செயலிழந்து கிடக்கிறார் என்ற அவுரங்கசீப்பின் பொய்யை முடியடிக்கவும், சக்ரவர்த்தியே தங்களுடன் இருக்கிறார் என்ற நம்பிக்கை வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கவும் முடியும் என்கிறார் ஷாஜகான். ஆனால் தாரா மறுத்துவிடுகிறான். அதே போல் " நம்முடைய பீரங்கிகள் எதிரிப்படையின் பெரும்பான்மையை நாசமாக்கிவிட்டன. இதுதான் தக்க தருணம்.நாம் முன்னேறலாம்.வெற்றி நம் பக்கமே" என்ற தளபதி கலீலுல்லாவின் வார்த்தைகளுக்கும் செவி சாய்க்க மறுத்து, " முதலில் அவர்கள் ஆக்கிரமிப்பைத் தொடங்கட்டும்.அப்போதுதான் நாம் எதிராக போரை நடத்த முடியும். அதுதான் பாதுகாப்பானது" என்ற தளபதி ருஸ்தும்கானின் பேச்சை ஏற்கிறான். அது அவுரங்கசீப்பிற்கே சாதகமாக அமைகிறது. அவுரங்கசீப்பை விட பலவிதங்களில் உயர்ந்தவனாக இளவரசர் தாரா இருந்த போதும் நெருக்கடியான நிலையில் தீர்க்கமான முடிவை எடுப்பதில் குழப்பம் கொள்கிறான். அதுவே அவன் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்து விடுகிறது.

யுத்தத்தில் தோற்றவனின் மனைவிகளை அபகரிக்கும் போது தாராவின் இரண்டு மனைவிகள் தங்கள் செய்கையால் கவனம் பெறுகிறார்கள். ஒருத்தி முதல் மனைவியான ராணா தில். கடைசி வரை அவுரங்கசீப்பின் ஆசைக்கு இணங்காமல் தன் உயிரையே மாய்த்துக் கொள்கிறாள். " ராணா தில்லும் கைதிதான். ஆனால் அவளால் அவுரங்கசீபைத் தோற்கடிக்க முடிந்தது. அவனுடைய அதிகாரத்தை அவமதிக்க முடிந்தது. இச்சையை ஏளனம் செய்ய முடிந்தது. அகந்தையை முறியடிக்க முடிந்தது" என ஜஹனாரா பெருமை கொள்கிறாள்.

 மற்றொருத்தி இரண்டாம் மனைவியான உதய்பூர் பேகம். இவள் ஆணைக்குப் பணிந்து அவுரங்கசீப் காமதொழுவத்தில் தளைக்கப்பட ஒப்புக்கொள்கிறாள்.

" இளவரசர் தாராவின் மனைவிகளில் ஒருத்தி என்ற பெயர். ஆனால் ஆரம்பத்திலிருந்த மோகம் கலைந்த பின்பு ஜனானாவின் உதிரிக் கூட்டத்தில் ஒருத்தியாகத்தான் அவரும் வைத்திருந்தார். என்ன, உணவுக்கும் உடைக்கும் யாசிக்கத் தேவையில்லாத வசதியான அடிமை. இளவரசருக்கு பிற பெண்களின் சரீரம் அலுக்கும்போது வந்து மேய்வதற்கான புல்வெளியாகத்தான் என் உடல் இருந்தது. அந்த மேச்சல் நிலத்தை இப்போது ஆலம்கீர் அவுரங்கசீப் ஆர்ஜிதம் செய்திருக்கிறார். இதிலும் என்ன புதிய மதிப்பு வந்துவிடப் போகிறது? எல்லாம் பழையது போலத்தான். எங்கள் வேதத்தில் ஒரு வசனம் இருக்கிறது. ' மனுஷர்கள் மண்ணிலிருந்து பிறக்கிறார்கள். மண்ணுக்கே திரும்பிப் போகிறார்கள்'. நான் வெறும் மண்ணாகத் திரும்பக் கூடாது. ஒரு பிச்சைக்கார யத்தீமாக நான் மடிந்து போக விரும்பவில்லை " என்று தன் தரப்பை ஜஹனாராவிடம் சொல்கிறாள்

உண்மையில்  உதய்பூர் பேகம் இவ்வாறு பேசியிருப்பாளா எனத் தெரியவில்லை. ஆனால் வரலாற்றில் தென்படும் மெளன இடைவெளிகளையும், அதிகாரத்தின் ஆணைக்கு பணிந்து  தங்கள் தரப்பைச் சொல்ல வாய்ப்பளிக்கப்படாமல் குரலற்றவர்களாய் இருக்கும் உதிரி பாத்திரங்களின் உணர்வுகளையும் பேச முற்படுவதால் தான் சுகுமாரனின் இந்த புனைவு மதிப்பு மிக்கதாய் மாறுகிறது. எனக்கு ராணா தில்லையும் உதய்பூர் பேகத்தையும் சமமாகவே பவிக்க முடிகிறது. அவரவர் பார்வையில் அவரவருக்கான நியதிகள் இருக்கவே செய்கிறது.



பேரரசர் அவுரங்கசீப் வரலாற்றில் மதிப்பு மிக்கவராக இருந்தாலும் கூட இந்த நாவல் அவரை வில்லன் கதாபத்திரமாகவே சித்தரிக்கிறது. காரணம் இது ஜஹனாராவின் பார்வையில் சொல்லப்படும் நாவல். அவளுக்கு தன் சகோதரன் தந்திரம் மிக்க வெள்ளைப் பாம்பு தான். அந்த பாம்பின் விஸ்வரூபத்தால் அவளின் நம்பிக்கைக்கும் அன்பிற்கும் உரியவர்கள் அனைவரும் நிர்மூலம் ஆகிவிடுகிறார்கள்

அரசியல் அதிகாரத்திற்கானப் போட்டி என்பது எல்லா காலத்திலும் ஒரே மாதிரி தான் இருக்கிறது. மன்னராட்சி, மக்களாட்சி என்று பெயர்களும் அதிகாரத்தை கைப்பற்றும் முறைகளும் மாறியிருக்கிறதே தவிர அதிகாரத்தில் இருக்கும் தலைவனின் மனநிலையும், அவனை சுற்றி துதிபாடும் அதன் மூலம் தன் அதிகாரத்தை வெளிப்படுத்தும் மனிதர்களின் மனநிலை எக்காலத்திலும் மாறவில்லை. அது மாறவும் மாறாது என்ற நிதர்சனத்தைத் தான் இந்த நாவலின் வழியே சுகுமாரனும் சொல்லி இருக்கிறார். அந்த வகையில் இது சமகால அரசியலை பேசும் நாவல் தான் என்றால் அது மிகையில்லை.