Tuesday 1 May 2018

அசோகமித்திரனின் இந்தியா 1944 - 48


இந்த வருட கோடை விடுமுறையின் துவக்கத்தில் நான் வாசித்த முதல் புத்தகம் அசோகமித்திரனின் "இந்தியா 1944 - 48". அவர் எழுதிய இரண்டு குறுநாவல்களை இணைத்து ஒரே புத்தகமாக  (அவரின் விருப்பத்தின் பேரில்) காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த இரண்டு குறுநாவல்களின் கதை களமும் ஒன்றே என்றாலும் கதைச்சொல்லிகள் வேவ்வேறானவர்கள். முதல் குறுநாவலான "பம்பாய் 1944" மணி என்ற இளைஞனின் பார்வையில் சொல்லப்படுகிறது. அடுத்த குறுநாவல் " இந்தியா 1948" மணியின் மூத்த சகோதரன் சுந்தரத்தின் பார்வையில் சொல்லப்படுகிறது. இது வழக்கமான குடும்பக் கதை தான் என்றாலும் அசோகமித்திரன் கதை நிகழும் காலம், கதைக் களம் மூலமாக வித்தியாசப்படுத்தியிருக்கிறார்.  பொதுவாக அசோகமித்திரன் தன் அனுபவப் பரப்பைத் தாண்டி முழுவதும் கற்பனையான படைப்பை எழுதியதில்லை என்பது என் வாசிப்பு அனுபவத்தின் புரிதல். விதி விலக்காக "பிரயாணம்" என்ற சிறுகதைச் சொல்லலாம். ஆனால் இந்த நாவல் பாலக்காட்டியில் ஆரமித்து பூனே, பம்பாய், அமெரிக்கா, ரிஷிகேஷ் என பயணிப்பது அசோகமித்திரனின் வாசகனாய் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுக்கிறது.

                                                           

முதல் குறுநாவல் ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் பம்பாயில் வசிக்கும் பிராமண இளைஞன் மணி எதிர்கொள்கின்ற பிரச்சினைகளைப் பேசுகிறது. அண்ணனின் சம்பாத்தியத்தில் வாழ நேரும் அவனுக்கு முதலில் வேலை இல்லாததும் பின் சோப்பு தயாரிக்கும் கம்பெனியில் வேலை கிடைப்பதும் அதனால் காசநோய் வருவதும், அதற்கான சிகிச்சையோடே அண்ணன் வேலை பார்க்கும் கார் கம்பெனியில் இவனும் வேலைக்கு முயற்சி செய்வதும் என கதை நகர்கிறது. 

அப்போது இரண்டாம் உலகப்போர் நடைபெறும் சூழல் என்பதால் உணவு பொருட்கள் தட்டுப்பாடு, கள்ள மார்கெட் விற்பனை, துறைமுகத்தில் எதிர்பாராமல் நிகழ்ந்த குண்டு வெடிப்பு, ராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிற அதிகப்படியான சலுகைகள் என்று அன்றைய பம்பாயின் சூழல் மணியின் அன்றாட வாழ்க்கையோடு சொல்லப்படுகிறது. நோய் வந்த சமயத்தில் ஆஞ்சநேயர் கோவிலில் சந்திக்கும் மராட்டிய குஸ்திவீரன் விநாயக் குடும்ப நண்பன் ஆவது. அவனுக்கு மணி வேலை வாங்கி தருவது. விநாயக்கின் தங்கை நிர்மலாவின் நற்குணங்கள் பார்த்து மணிக்கு திருமணம் செய்ய அவனின் அம்மா, அண்ணி ஆசைப்படுவது என நாவல் விரிகிறது. 

எண்பது பக்கங்களுக்கு மிகாத இந்த குறுநாவலில் என்னை கவர்ந்த விஷயம் மணியின் குடும்பம் மராட்டிய குஸ்திவீரன் விநாயக்கின் குடும்பத்துடன் நெருங்கிய உறவு போல பழகுவது. பாலக்காடு பிராமண ஆச்சாரமெல்லாம் பம்பாய் போன்ற பெருநகரங்களில் செல்லுபடியாகாத விஷயங்கள் என்ற புரிதல் தான் நிர்மலாவை மணிக்கு மணமுடிக்கலாம் என்று யோசிக்க வைக்கிறது. ஒருவேளை நாம் வாழும் சமூகம் தான் சாதி அடையாளங்களைத் தூக்கி பிடித்த படி இருக்கிறதோ. அந்த சமூகத்திலிருந்து விலகி பெருநகரங்களில் அடையாளமற்று இருக்கும் போது சாதி பெரிய தடையாக இருப்பதில்லையோ அல்லது தன்னுடைய சர்வேவலுக்காக இவ்வாறு வளைந்து கொடுத்து போகிறதோ என தெரியவில்லை. சாதியின் பேரால் இன்று கூட கெளரவ கொலைகள் நடப்பதைப் பார்க்கும் போது இதையெல்லாம் யோசிக்கத் தோன்றுகிறது.

இரண்டாவது குறுநாவல் " இந்தியா 1948" மணியின் மூத்த சகோதரன் சுந்தரத்தின் பார்வையில் சொல்லப்படுகிறது. ஆங்கிலம் தெரிந்தவன் என்ற காரணத்தால் அமெரிக்காவிற்கு சென்று கார் தொழில் நுட்பத்தை ஓர் ஆண்டு கற்று வர கம்பெனியால் அனுப்பி வைக்கப்படுகிறான். அங்கு மேலும் ஓர் ஆண்டு தங்கி மோட்டார் எஞ்சினீரிங் படித்து முடிக்கிறான். இரண்டாண்டுகள் கழித்து நாடு திரும்பும் அவனுக்கு சுந்திர இந்தியாவின் மாற்றங்கள் தொழில் ரீதியாக சிக்கலை உருவாக்குகிறது. அவன் பணி செய்யும் கார் கம்பெனியின் முதலாளி அமெரிக்கன் என்பதால் வாகனங்களின் உதிரி பாகங்களை இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. அமெரிக்காவில் இருந்த போது உயர்கல்வி படிக்க வந்திருக்கும் லட்சுமி என்னும் பார்சி இன பணக்காரப் பெண்ணோடு சுந்தரத்திற்கு திருமணம் நடந்து விடுகிறது. ஐந்து வயதிலேயே இளம்விதவையாகி விடும் லட்சுமி. தன் கல்வியின் மூலம் தனக்கான விடுதலையைப் பெற முயல்கிறாள். லட்சுமியுடனான திருமணத்தை குடும்பத்திடம் எப்படி பகிர்ந்து கொள்வது என்று குழப்பத்தில் தவிக்கிறான். இத்தோடு பார்வதி இரண்டாவது முறையாக கர்பமாவதும், குழந்தையின் தலை திரும்பி இருப்பதால் பிரசவம் பெரும் சிக்கலாக இருக்கும் என மருத்துவர் சொன்னதால் ஏற்பட்ட பயம் என இக்குறுநாவல் வளர்கிறது. இந்த பிரச்சினைகளை எல்லாம் சுந்தரம் எவ்வாறு எதிர்கொண்டான் என்பதை எவ்வித மிகையும் இன்றி அன்றைய காலகட்டத்தின் தர்ம ஞாயங்களோடு அசோகமித்திரன் நாவலை முடித்திருக்கிறார்.

இந்த நாவலில் என்னை ஈர்த்த விஷயம் 1948- லேயே லட்சுமி அமெரிக்க சென்று படிப்பதும், மணியின் மனைவி பம்பாய் நகரத்தில் காரோட்டுவதும். ஒருவேளை பணக்கார பார்சி மற்றும் பிராமண குடும்பத்து பெண்கள் என்பதால் இந்த சுதந்திரம் இருந்ததோ என்னவோ தெரியவில்லை. ஆனால் மராட்டிய ஏழை பெண் நிர்மலா கூட தனக்கு திருமணம் இப்போது வேண்டாம். நான் படிக்க வேண்டும் என சொல்ல முடிகிறது. இந்த பெண்களோடு ஒப்பிடும் போது சுந்தரத்தின் மனைவி பார்வதி தான் பரிதாபத்திற்கு உரியவள். அவள் விருப்பம் கேற்கப்படாமலேயே தந்தையால் நடத்தி வைக்கப்படும் திருமணம். வேலையின் மித்தம் அமெரிக்கா சென்ற கணவனை இரண்டு ஆண்டுகள் பிரித்திருப்பது. தனக்கு தெரியாமல் கணவன் இன்னொரு திருமணம் செய்து கொள்வது என பலவிதங்களில் துன்பப்படுகிறாள். ஆனாலும் எந்த இடத்திலும் அவளால் எதிர்த்து பேச முடிவதில்லை. சுந்தரத்தின் அம்மா கூட ஆளுமை மிக்கவளாக இருக்கிறாள். ஆரம்பத்தில் அண்ணன் வீட்டில் விதவையாக அடங்கி இருந்தவள். தன் மகன்கள், மருமகளோடு பம்பாய் வந்ததும் தனக்கான அதிகாரத்தை எடுத்துக் கொள்கிறாள். எல்லா விஷயங்களையும் தீர்மானிக்கிற உரிமை அவளிடமே இருக்கிறது. மேலும் லட்சுமி மற்றும் அவளின் அம்மா என்று நாவலில் வரும் பெண் பாத்திரங்கள் அனைத்துமே மிகுந்த சுதந்திரத்தோடு இருப்பதைப் பார்க்க முடிகிறது.

இதற்கு எதிர்மாறாக நாவலில் வரும்  ஆண்கள் பயம் மிக்கவர்களாக, குழப்பவாதிகளாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. சுந்தரத்திற்கோ இரண்டாம் திருமணத்தை குடும்பத்தினரிடம் சொல்ல பயம், அதை அவர்கள் எவ்வாறு எதிர்கொள்வார்கள், சமூக என்ன நினைக்கும் என குழம்பி தவிக்கிறான். அவன் தம்பி மணியோ காசநோய் காரணமாக உயிர் பயத்தில் தவிக்கிறான். மராட்டிய பயில்வான் விநாயக் தனக்கு ஏதாவது வேலை கிடைக்குமா இல்லை வறுமையிலேயே கிடக்க வேண்டுமா என பயமும் குழப்பமுமாக இருக்கிறான். இவர்கள் எல்லோரையும் மிஞ்சும் விதமாக சுந்தரத்தின் மாமா ( பார்வதியின் தந்தை) ஐந்து பெண்களில் மூத்தவளுக்கு மணம் முடித்த கையோடு சாமியாராகப் போகிவிடுகிறார். இப்படி ஆண்கள் பலவீனர்களாகவும் பெண்கள் தைரியம் மிக்கவர்களாகவும் இருப்பது இந்த நாவலின் பலம் என நினைக்கிறேன்.

இந்திய சுதந்திரம் பற்றி, விடுதலைப் போராட்டம் குறித்து இந்த நாவலில் அதிகம் பேசப்படுவதில்லை. புதுமைப்பித்தன், கு.ப.ரா, ந.பிச்ச மூர்த்தி, மெளனி என மணிக்கொடி எழுத்தாளர்கள் கூட தங்கள் படைப்பில் சுதந்திரப் போராட்டம் பற்றி எழுதவில்லை தான். அப்படி எழுதியே ஆக வேண்டும் என்ற எவ்வித கட்டாயமும் இல்லை தான் என்றாலும் இந்த நாவலில் அதற்கான சாத்தியங்கள் இருந்த போதும் சொல்லப்படுவில்லை. அசோகமித்திரனுக்கு எழுத கூடாது என்ற மனதடைகள் இருக்கும் என நினைக்கவில்லை. அவரின் " பதினெட்டாவது அட்சக்கோடு" நாவலில் சுதந்திர இந்தியாவுடன் இணையும் போது ஐதராபாத் நிஜாம் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் நிகழ்ந்த பதட்டமான சூழல்கள் குறித்தே எழுதியிருக்கிறார். ஒருவேளை நடுத்தர பிராமண குடும்பங்களுக்கு சுதந்திர போராட்டம் பற்றியெல்லாம் பேச தேவை எழவில்லையோ என தோன்றுகிறது. இந்த நாவலின் மையபாத்திரமான சுந்திரம் உண்மையில் இந்தியா சுதந்திரம் அடைந்ததை விரும்பவில்லை. காரணம் அவன் அமெரிக்கா சென்று இரண்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு படித்த எதுவும் பயன்படாமல் போகிறது. சுதந்திர இந்தியாவில் அன்னிய நாட்டு கம்பெனிகளின் தயாரிப்புகளுக்கு அரசு தடைவிதிக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சியில் கார் தயாரிப்பில் கொடிகட்டி பரந்த நிறுவனம் இன்று தான் விற்பனை செய்த கார்களை பழுது பார்க்கும் ஒர்க்‌ஷாப் மாதிரி ஆகிவிடுகிறது. வாகனங்களின் உதிரிபாகங்களை இறக்குமதி செய்வதிலும் அரசு நெருக்கடி கொடுப்பதால் அமெரிக்க முதலாளி, தன் கம்பெனியை இந்தியர்களுக்கு விற்பனை செய்யும் நிலை உருவாகிறது. 

இந்த நாவலில் இன்னொரு முக்கியமான விஷயம். சுதந்திர இந்தியாவை ஆட்சி செய்த பல மந்திரிகளுக்கு அரசு இயந்திரத்தின் இயக்கம் பற்றி ஒன்றுமே தெரிவதில்லை. ( பின்னால் அனுபவம் மூலம் கற்றுக் கொண்டார்கள் என்பது வேறு)  பல ஆண்டுகள் ஆங்கிலேயர் ஆட்சியில் பணி செய்த உயர் அதிகாரி ஒருவர் இதை குத்தி காட்டி தொடர்ந்து திட்டிய படியே இருக்கிறார். அவர் நேர்மையான அதிகாரியாக இருந்தும் கூட சின்ன பிரச்சினைக்காக பணிநீக்கம் செய்யப்படுகிறார் என கதையின் போக்கில் சொல்லப்படுகிறது. ஆக அரசியல் பழிவங்கல் அப்போதே தொடங்கி விட்டதை அறிய முடிகிறது.   

                                                                   

இந்த நாவலில் முக்கியமான ஆளுமையாக சுந்தரத்தின் மாமாவை சொல்லத் தோன்றுகிறது. பேராசிரியராக வெளிமாநிலங்களில் பணி செய்து தன் குடும்பம் மற்றும் சகோதரியின் இரண்டு குழ்ந்தைகளையும் வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார். எல்லோரிடமும் சிரித்த முகத்தோடு பழகும் அவர் சுந்தரத்திற்கு வேலை கிடைத்த பின்னரே சாமியாராகப் போகிறார். மணி படிப்பில் கவனமில்லாமல் இருக்கும் போது தன்னோடு தங்க வைத்து சொல்லிக் கொடுத்து படிப்பில் வெற்றி பெற செய்ததும், சுந்தரத்தின் இரண்டாம் திருமண நிர்பந்தத்தை புரிந்து கொண்டு அவன் சார்பாக தன் மகள், தங்கையிடம் பக்குவமாக பேசுவதும், இந்த நாவலில் அவருக்கான முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

பொதுவாக அசோகமித்திரனின் படைப்புகள் ஏழை எளிய சாமானியர்களின் வாழ்வில் நிகழும் பிரச்சனைகளும், அதை எதிர்கொள்வதில் அவர்களுக்கு இருக்கும் தடுமாற்றம், வலி, வேதனைகளையும் எவ்வித கழிவிறக்கமும் கொள்ளாமல் நேர்மையோடு பதிவு செய்பவை. அவரை போலவே அவரின் கதாபாத்திரங்களுக்கும் வாழ்க்கை குறித்து எவ்வித புகாரும் இருப்பதில்லை. தோல்விகளையும், துரோகங்களையும் கடந்து அவர்களால் நம்பிக்கையோடு வாழ்க்கையை வாழ முடிகிறது. இந்த நாவலும் அப்படிபட்ட  மனிதர்களின் கதையையே வரலாற்று பின்புலத்தோடு சொல்கிறது என்றால் அதுமிகையில்லை.