Monday 26 November 2018

கேசம் –நரன்


நவீன தமிழிலக்கியச் சூழலில் ஒரு கவிஞனாக தன்னுடைய இருப்பை உறுதி செய்த நரனின் அடுத்த நகர்வு சிறுகதைகள். “கேசம்என்ற அவரின் தொகுப்பில் மொத்தம் பதினோரு கதைகள் உள்ளன. ஒரு கதைசொல்லியாக தன் ஒவ்வொரு கதையின் களத்தையும் வித்தியாசப்படுத்த முயன்றிருக்கிறார். அவரின் அற்பணிப்பை ஒரு வாசகனாய் உணரும் தருணத்தில் இந்த பிரதியின் மீதான மதிப்பு கூடவே செய்கிறது.

இந்த தொகுப்பிலுள்ள மொத்தக் கதைகளையும் வாசித்தப் பின் மனம் ஒருவிதமான இருண்மை கொள்கிறது. துயரத்தை எழுதுவதில் தான் நரனுக்கு பெரும் விருப்பம் போலும். விருப்பமானவர்களின் துர்மரணமும் அந்த மரணத்தின் துயரை தாங்கிக் கொள்ள முடியாதவர்களின் மன பிரழ்வு நிலையும், அப்போது அவர்கள் வெளிப்படும் புதிரான நடவடிக்கைகளுமே இக்கதைத் தொகுப்பின் மையம் எனலாம்.

இத்தொகுப்பின் தலைப்பு கதையான கேசத்தில் வரும் வேலைக்காரி ஆவுடைத்தங்கம், ரோமம் கதையின் நாயகன் கணேஷ், மூன்று சீலைகள் கதையின் காசி, செவ்வக வடிவ பெண்களில் வரும் லீலா தாமஸ், பரிராஜா கதையில் பேராசிரியர் நிக்கோலஸ், பெண் காது கதையின் அடைக்கலராஜ் என ஏதோ ஒரு வகையில் மன பிரழ்வு கொண்டவர்களின் நிலையை நரன் எவ்வித பாசாங்குகளும் அற்று, தனக்கு வசப்பட்ட தேர்ந்த மொழியில் பேச விழைந்திருகிறார். அவை அதிர்ச்சியையும், பரிதாபத்தையும், கழிவிறக்கத்தையும் ஏன் சிரிப்பையும் கூட உண்டாக்குகின்றன.

குறிப்பாக ரோமம் என்ற கதையில் வரும் கணேஷ் பித்து நிலையில் நடந்து கொள்ளும் விதம் வாசிக்கும் நம்மையும் பதட்டமடையவே செய்கிறது. இந்த கதை எனக்கு “Perfume: thestory of a murderer” என்ற ஆங்கிலப் படத்தின் மையக் கதையை நினைவுபடுத்துகிறது என்ற போதும் நரன் இந்த கதையில் பித்து நிலையின் உச்சத்தை தன் எழுத்தில் தொட்டு விட்டதாக உணர்கிறேன்.  

நரனின் கதை மாந்தர்கள் அன்புக்காக ஏங்குபவர்களாகவும், பிரிவையும் அவமானத்தையும் மறக்க முடியாதவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்களின் மனப் பிரழ்வு நிலை அடுத்தவர்களைப் பாதிக்காமல்  ( கணவனால் தனக்கு நேர்ந்த துன்பத்தையும் அவமானத்தையும் மறக்க முடியாத லீலா தாமஸ் தன் துணிக்கடையில் வைக்கப்பட்டிருக்கும் ஆண் பொம்மையை கோவத்தோடு அடித்து உடைப்பது தான் அவர்கள் செய்யும் அதிக பட்ச வன்முறை எனலாம்.) தன்னை சிதைத்துக் கொள்வதிலும், உச்சபட்சமாக தற்கொலை செய்து கொள்வதிலுமே முடிந்து விடுவது பெரும் துக்கமே என்றாலும் ஒரு வகையில் ஆறுதலே.

காரணம் வாழ்வின் மைய நீரோட்டத்திலிருந்து கொஞ்சம் பிசகி தங்களைத் துண்டித்துக் கொள்ளும் இவர்கள் மீட்க முடியாத நிலையில் தங்களைத் தாங்களே வருத்திக் கொள்வதால் அவ்வாறு எண்ண வைக்கிறது.

இக்கதைகளின் களம், கதை மாந்தர்கள் எல்லாம் சமகாலத்தில் வாழ்பவர்களாக இல்லாமல் எண்பதுகளிலும் தொன்னூறுகளிலும் வாழ்ந்தவர்கள் போல் தோன்றுவது இத்தொகுப்புக்கு பழைமையான நெடியைக் கொடுக்கிறது. அதனால் இக்கதைகளை வாசித்து முடித்ததும் புதிகாக ஒன்றை வாசித்த திருப்தி தராமல் எப்போதோ வாசித்த பழைய கதையை மீள் வாசிப்பு செய்ததான உணர்வைக் கொடுப்பது மட்டுமே இத்தொகுப்பின் பலவீனம் என நினைக்கிறேன். ஆனாலும் நரனின்  வசீகரமான மொழியும், திறன்பட கதையை நகர்த்தி செல்லும் போக்கும் இந்த பலவீனத்தை ஒன்றுமில்லாதாக மாற்றி விடுகிறது.

கேசம்இந்த வருடத்தில் வெளி வந்துள்ள சிறுகதைத் தொகுப்புகளில் முக்கியமான தொகுப்பு. நண்பர்களுக்கு இதை மிகுந்த மகிழ்வோடு பரிந்துரைக்கிறேன்.