Friday 16 February 2018

லைலா எக்ஸ்: பெண்ணியமும் தலித்தியமும் இணையும் புள்ளி

                                                                                               

                                                                                                                       

பொங்கல் விடுமுறையில் லைலா எக்ஸின் "பிரதியின் நிர்வாணம்" என்ற சிறுகதைத் தொகுப்பை வாசித்தேன். இந்த ஆண்டில் வாசித்த முதல் புத்தகம் இது. ஏற்வாடியில் நடந்த மக்கள் கலை இலக்கிய விழாவில் வெளியிடப்பட்ட இந்த நூலை ஹரிகிருஷ்ணனின் மணல்வீடு இலக்கிய வட்டம் பதிப்பித்துள்ளது

இந்த தொகுப்பில் மொத்தம் எட்டு கதைகள் உள்ளது. இதில் ஆறு கதைகள் காதல், காமம் சார்ந்த உணர்வுகளின் தீவிரத்திற்குள் சுழலும் பெண்களின் அக நெருக்கடிகளையும், பதின் வயதின் துவக்கத்திலேயே அவர்களின் உடல்கள் மேல் நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகளையும் எவ்வித பாசாங்குகளும் அற்று நேரடியாக பேச முனைகிறது. மற்ற இரண்டு கதைகள் தலித் பெண்கள் தங்கள் அடையாளங்களிலிருந்து விலகி மேலெழுந்து வர போராடுவதும் அதை உயர்சாதி மனமோபாவம் எதிர் கொண்ட விதங்களையும் மிக அழுத்தமாக பதிவு செய்கிறது. பெண்ணியமும் தலித்தியமும் இணையும் புள்ளி தான் லைலா எக்ஸின் படைப்பிலக்கிய களம் என்பது என் அனுமானம்.   

தமிழ் சூழலில் பாலியல் சார்ந்த கதைகள் எழுதிய கு..ரா, தி.ஜானகிராமன், ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், தஞ்சை பிரகாஷ், சாரு நிவேதிதா, ஜெ.பி.சாணக்யா, லக்ஷ்மி சரவணகுமார், வாமு கோமு என்று ஆண் படைப்பாளிகளின் பெரிய தொடர்ச்சியே இருந்த போதும், பெண்களால்  பாலியல் சார்ந்து எழுதப்பட்ட உடலரசியல் கவிதைகளில் காந்தாரமாக வெளிபட்ட அளவிற்கு புனைக்கதைகளில் வரவில்லை என்பது என் புரிதல்.   இக்கதைகளில் தன்னியல்பாக நிகழும் பெண்ணின் சுய இன்ப செய்கைகளும், தன் அகங்காரம், விருப்பு வெறுப்பு சார்ந்த மூர்க்கமான உடலுறவுகளும், பேருந்து, திரையரங்குகளில் ஆண்களால் நிகழ்த்தபடும் சில்மிசங்களை ரசிக்கிற, கூட்டு களவியில் ஈடுபடும் பெண்ணை பற்றியெல்லாம் கதைகளில் வாசிக்கும் போது கலாச்சார காவலர்களுக்கும், இலக்கிய ஒழுக்க சீலர்களுக்கும் கடும் அதிர்ச்சியைத் தரலாம் என்றாலும் இவை வெறும் அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக மட்டுமே எழுதப்பட்டவை அல்ல. இவை நாம் கண்டும் காணதது போல் கடந்து போக நினைக்கும் உண்மைகள். இந்த உண்மைகளை தனக்கு வசப்பட்ட அடர்த்தியான மொழியில் லைலா எக்ஸ் பதிவு செய்திருக்கிறார்

தன் இலக்கிய ஆசானாக சாரு நிவேதிதாவையும், இத்தொகுப்பை ஷோபா சக்திக்கும் சமர்பணம் செய்துள்ளார்இதனால் பாலியல் சார்ந்து எழுதும் துணிவை சாருவிடமும் சிறுகதை என்ற வடிவத்தை கையாளும் பிரஞ்சையை ஷோபாவிடமும் கற்றிருப்பது தெரிந்தாலும் கூட ஜெ.பி.சாணக்யாவின் படைப்புலகிற்கு நெருக்கமானவராகத் தான் லைலா எக்ஸை என்னால் அடையாளம் காண முடிகிறது.

இத்தொகுப்பில் "வன்மம்" என்ற கதை சாணக்யாவின் "ஆண்களின் படித்துறை" என்ற சிறுகதையின் நேர்எதிர் பிம்பம் போல் உள்ளது. இரண்டு கதைகளிலுமே தாய்- மகள் இருவரின் ஈகோ மோதலை தான் பிரதானப்படுத்துகிறது என்றாலும் சாணக்யாவின் கதையில் வரும் தாய் கருணையானவள். டிங்கு என்ற பைத்தியத்தின் உடலியல் தேவையை கூட அவளால் புரிந்துக் கொண்டு ஒத்துழைக்க முடிகிறது. ஆனால் லைலா எக்ஸ் கதையின் தாய் தந்திரமானவள். இரவில் வயதுக்கு  வந்த மகள் இருக்கவே குடிகார கணவனின் சந்தேக புத்தியால் அடிவாங்கவும், சபல புத்தியால் உறவு கொள்ளவும் பகல் பொழுதுகளில் எதுவும் நடக்காதது போல் நடிக்கவும் அவளால் முடிகிறது. இந்த தாய்களின் குணம் அவர்களின் மகள்களை எவ்வாறு பாதிக்கிறது. இதற்கு அவர்களின் எதிர்வினை என்னவாக இருக்கிறது என்பதில் தான் இருவரின் தனிதன்மை வெளிப்படுகிறது

வன்மம், பதின்மம் × உடல் = இவ்வாழ்வு என்ற கதைகளும் கூட ஒரே தளத்தில் எழுதப்பட்ட கதைகள் தான். வன்மம் கதையில் தன்னுடலை தன் தாயின் மீதான ஆங்காரத்தில் அவளை பழி வாங்கும் நோக்கில் காமத்தில் திளைத்து யாரால் கருவுற்றோம் என்பது தெரியாமல் தாயிடமும் சமூகத்திடமும் தோற்றவள், பதின்மம் × உடல் = இவ்வாழ்வு கதையின் முடிவில் கல்வியால் வாழ்க்கையை வெற்றி கொள்கிறாள் என வாசிக்கும் போது இந்த புனைகதைகள் பாலியல் வேட்கையின் வீழ்ச்சிகளை மட்டும் பேசாமல் அவற்றைக் கடக்க உதவும் நம்பிக்கைகளைக் குறித்தும் அக்கறை கொள்வதை உணர முடிகிறது

"ஜெர்சி கனவுகள்" என்ற கதை கூடைப் பந்தாட்டத்தை மையமாக கொண்டு எழுதப்பட்டுள்ளது. இக்கதையில் இரண்டு பயிற்சியாளர்களை (கோச்) கோல்கம்பமாகவும் தேசிய அளவில் விளையாடும் பெண்ணை பந்தாகவும் மாற்றி காதல், காமம் சார்ந்த அவர்களின் புதிரான நடத்தைகளைப் பற்றி லைலா எக்ஸ் தன் புனைவில் விளையாடியிருக்கிறார். அந்த ஆட்டம் வாசகனையும் வசீகரிக்கிறதுதொகுப்பின் தலைப்பு கதையான "பிரதியின் நிர்வாணம்" காலங்காலமாய் பெண்ணுடலையும், அவளை கவர ஆண்கள் செய்யும் அத்தனை நடைத்தைகளையும் களைத்து போட்டு பகடி செய்கிறது. டைட்டானிக் படத்தில் ஜேக்கை நிர்வாணமாக்கி ரோஸ் வரைந்தால் என்ற சித்திரம் போது லைலா எக்ஸின் படைப்பிலக்கிய அரசியலை புரிந்து கொள்ள. நுண்கலைகள் அனைத்தும் பெண்ணின் உடலையே பிரதானப்படுத்தும் போது அதன் எதிர் வினையாய் ஆணுடலை அவ்வாறே ஒரு பெண் பிரதி செய்யும் போது வெளிப்படும் அபத்தங்கள் நம்மை குற்றவுணர்விற்கு தள்ளுகிறது.

 பொதுவாக மென்பொருள் துறையில் பணிசெய்யும் பெண்கள் குடிக்கும், பாலியல் வேட்கைக்கும் அடிமையான பப் கலாச்சாரத்தில் திளைப்பவர்கள் என்பதான பார்வையே திரைபடங்களும், சமூக ஊடகங்களும் கட்டமைத்திருக்கிறது. இத்துறையில் பணிபுரியும் விநாயக முருகனின் “ராஜீவ் காந்தி சாலை” நாவலில் கூட அப்படியான பெண்சித்திரமே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பொதுபுத்தி கருத்தாக்கத்தை சிதைக்கும் பார்வையை "கனகாவின் மென்பொருள் மேம்படுத்தப்பட்டது" என்ற கதை தருகிறது. மென்பொருள் துறையில் பணிசெய்யும் ஒரு தலித் பெண்ணின் திருமண வாழ்க்கை காதல், கலப்பு மணம் என்று வெற்றிகரமாக ஆரமித்து பிராமண கணவனின்  ஆச்சாரக் குடும்பத்தில் தன்னை பொருத்திக் கொள்ளும் போராட்டத்தில் தான் எத்தனை சமரசங்கள் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது.  புகுந்த வீட்டில் தான் ஒரு ATM மெஷினாகத் தான் கருதப்படுகிறோம் என்ற கசப்பும், கதையின் இறுதியில் நோயுற்று படுக்கையில் கிடக்கும் தன் மாமியாரின் மூத்திரப்பையைச் சுத்தம் செய்யும் காட்சி வேலை சார்ந்து எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருந்தாலும் தலித் பெண்களின் கலைக்க முடியாத ஒப்பனையை இக்கதை மிக அழுத்தமாக சொல்கிறது.

“முத்தி” கதையில் வரும் பெண் அரசு பள்ளியில் தற்காலிகமாக துப்புறவு பணி செய்பவள். அப்பள்ளியில் பத்தாம் வகுப்பில் இரண்டாம்  மதிப்பெண் வாங்கிய தன் மகளை கல்வியால் உயர்த்த கனவு காண்பதும் அந்த கனவை சிதைக்கும் பள்ளி தலைமையாசிரியரின் உயர் சாதி மனோபாவமும் . முத்தி போன்ற தாய்மார்களின் தியாகத்தால் மேலெழுந்து வரும் மகள்கள் பிற்காலத்தில் தெரிந்தோ தெரியாமலோ சென்றடையும் இடம் தான் "கனகாவின் மென்பொருள் மேம்படுத்தப்பட்டது" கதையின் களம் என தோன்றுகிறது. முத்தியின் மகள் தான் கனகா என்கிற லட்சுமி என்ற புரிதல் எனக்கு தகழியின் “தோட்டியின் மகன்” நாவலின் முடிவை நினைவுபடுத்துகிறது.

எந்த வித வெளியீட்டு ஆரவாரங்களும் சமூக ஊடகங்களில் மிகையான விளம்பரங்களும் இன்றி தன் படைப்பின் மீதான நம்பிக்கையோடு சிற்றிதழ் பாரம்பரிய பின்னனியோடு வெளிவந்திருக்கும் இப்படைப்பு அதிகம் பேசப்படும் என்பது என் எதிர்பார்ப்பு. எந்த வித பரிந்துரைகளும் அற்று நானே கண்டு கொண்ட நல்ல தொகுப்பு என்ற பெருமிதத்தோடு நண்பர்களுக்கு பரிந்துரை செய்கிறேன்.



No comments:

Post a Comment